சட்டவிரோதமான முறையில் குவைத் நாட்டுக்கான விசாவை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் கைரேகை மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறித்து இந்திய காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குவைத் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்தவர்களின் கைரேகைகளை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அறுவை சிகிச்சை முயற்சியை இந்தியாவின் தெலுங்கானா காவல்துறையினர் அண்மையில் முறியடித்தனர்.
இதன்போது புதிதாக குவைத் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக கைரேகையை மாற்றிக்கொண்டதாக கூறப்படும் இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
குவைத்தில் சட்டவிரோதமாக விசா காலத்தை மீறித் தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்டவர்களை மீண்டும் அங்கு செல்வதற்காக இந்த குழு சட்டவிரோத கைரேகை மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவ துணைப்பணியாளர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இலங்கை தொடர்பான தகவல்களும் வெளியாகின.
குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர் ஒருவர், மீண்டும் குவைத்துக்கு சென்று பணி செய்வதற்காக இலங்கையில் கைரேகை மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்டமையை தாம் அறிந்து கொண்டதாக அவர் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தாமும் இந்த கைரேகை மாற்று சிகிச்சைகளை வருமான ஈட்டும் வகையில் மேற்கொண்டு வந்ததாக அவர் விசாரணையாளர்களிடம் குறித்த மருத்துவ துணைப்பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிகிச்சைக்காக ஒருவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபா வரையில் அறிவிடப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர் காவல்துறை விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெலுங்கானா காவல்துறையினர், இலங்கை காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.