
அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் வெற்றிபெறுவது தனக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே எனவும் தெரிவித்தார்.
நேற்று (06) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் எனவும், இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
'ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்பதே இவ்வருட ஐக்கிய தேசிய கட்சி ஆண்டுவிழாவின் பிரதான தொனிப்பொருளாகும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அனைவரினதும் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதமர் தலைமையிலான பல கட்சித் தலைவர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டார். (யாழ் நியூஸ்)