கடமையை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மிஹிந்தலையின் கல்லஞ்சிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை வீதியில் வைத்து கடுமையான முறையில் தாக்கிய குற்றச்சாட்டில் இருவரைக் கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் கஹட்டகஸ்திகிலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் – திரகோணமலை வீதியின் மிஹிந்தல சீப்புக்குளம் கருவலகஸ்கின்ன பகுதியிலுள்ள விஹாரை ஒன்றுக்கு அருகாமையில் நடைபாதைக் கடைகளை வைத்திருந்தவர்களை அங்கிருந்து அகன்று வேறொரு இடததுக்குச் செல்லுமாறு குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தெரிவித்திருந்ததன் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சார்ஜன்டை சந்தேக நபர்கள் வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொலிஸ் சார்ஜன்டை வீதியில் வீழ்த்தி தாக்கியதாகவும், சம்பவ இடத்தில் காணப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மோதலை தடுக்க முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.