கேகாலை – கலுகல்ல மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலக கட்டடத்தின் அறையொன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் பெண் ஒருவரின் சடலம் இன்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவரச அழைப்பு பிரிவுக்கு கிடைத்த அழைப்பொன்றினை அடுத்து இவ்வாறு குறித்த சடலம் கட்சி அலுவலக கட்டிடத்தின் பின்பக்க அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
கேகாலை - ஹபுதுகல பகுதியை சேர்ந்த 36 வயதான சகுந்தலா வீரசிங்க என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்ஸ்மன் திசாநாயக்க சந்தேகத்தின் பேரில் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்
உயிரிழந்த பெண் இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண் கட்சி அலுவலகத்தில் நீண்ட நாட்களாக சேவையாற்றுபவர் என கூறும் பொலிஸார், ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, இன்று காலை கட்சி அமைப்பாளர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்து சென்றதாக தெரிய வந்ததாகவும், அதனடிப்படையில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் சான்றுகளை மையப்படுத்தி கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினர்.
கட்டில் ஒன்றின் மேல் கிடந்த குறித்த பெண்ணின் சடலத்தின் மார்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அருகே மில்லி மீற்றர் 38 ரக கைத்துப்பாக்கியொன்றும் இருந்ததாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் கொலையா, அல்லது தற்கொலையா என கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
-எம்.எப்.எம்.பஸீர்