அந்நியச் செலாவணி நெருக்கடி தணிந்தவுடன் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இன்று (13) தெரிவித்தார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தடை தற்காலிக நடவடிக்கை எனவும், அது முறையாக திருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
"இறக்குமதி தடை காரணமாக பல தொழில்கள் தங்கள் அத்தியாவசிய மூலப்பொருட்களை பெற முடியாமல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இறக்குமதி தடை ஒரு தற்காலிக நடவடிக்கை தான்,'' என்றார்.
இறக்குமதி தடையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்து அத்தியாவசிய மூலப்பொருட்களுக்கான இறக்குமதி நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன மேலும் தெரிவித்தார்.
“மேலும் தடை செய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் பட்டியல் நிரந்தரமானது அல்ல. தற்போதைய தேவைகளின் அடிப்படையில் திருத்தம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார்.
இது தொடர்பில் பல தொழில்துறை பங்குதாரர்கள் தங்களின் குறைகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இறக்குமதி பொருட்களுக்கான தடை திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அனுமதி பெறப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)