பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ் பத்திர பிரதிகளின் செல்லுப்படியாகும் காலத்தை, எவ்வித வரையறைக்கும் உட்படுத்தாது ஏற்றுக்கொள்ளுமாறு பதிவாளர் நாயகத் திணைக்களம் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளது.
இதன்படி கல்வி அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் என்பவற்றுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பீ அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தங்களது நிறுவனங்களில் சேவை பெறுநர்கள், பதிவாளர் நாயக திணைக்களத்திடமிருந்து ஆறு மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ் பத்திர பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும் என சில நிறுவனங்கள் வரையறைகளை விதித்துள்ளன.
இதன்காரணமாக பொதுமக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த விடயம் பதிவாளர் நாயகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பதிவாளர் நாயகம், தங்களது தெளிவான அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதி இருக்குமாயின், மீண்டும் புதிய பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அந்த சான்றிதழ் பிரதிகள், எந்த காலப்பகுதிக்கும் செல்லுபடியாகும்.
ஏதெனுமொரு சந்தர்ப்பத்தில், பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின், திருத்தப்பட்ட புதிய பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பீ அபேவர்தன தெரிவித்துள்ளார்.