ரஷ்ய எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான கடனைப் பெறுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் என இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர் தன ஸ்புட்னிக் உடனான நேர்காணலில் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதாகவும், ரஷ்யாவிடம் இருந்து அதிக ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், கடன் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ரியா நோவஸ்தி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இலங்கையில் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதாக ரஷ்ய டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான சம்பவம் எனவும், அது பாரிய தவறு எனவும், அதற்காக இலங்கை அதிகாரிகள் மன்னிப்பு கோருவதாகவும் பந்துல குணவர்தன அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கையில் எந்தவொரு விமானத்தையும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
MIR எனப்படும் ரஷ்ய கட்டண முறைமையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும், இரு வங்கிகளின் மத்திய வங்கிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் பந்துல குணவர்தன ஸ்புட்னிக் உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்ய பிரஜைகள் Mastercard மற்றும் Visa அட்டைகளை பயன்படுத்த முடியாத நிலையில், இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ரஷ்ய கடன் மற்றும் பற்று அட்டைகளை ரஷ்ய கட்டண முறையுடன் இணைக்க முடியும் என குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய வங்கியின் அனுமதி கிடைத்த பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)