ஆர்ஜெடீனா நாட்டின் உப ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கேர்ச்னரை சுட்டுக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, துப்பாக்கி இயங்காததால் தோல்வியுற்றது.
ஆர்ஜென்டீனாவின் முன்னாள் முதற்பெண்மணியான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கேர்ச்னர் 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் 2019 டிசெம்பர் முதல், அந்நாட்டின் உப ஜனாதிபதியாக அவர் பதவி வகிக்கிறார்.
69 வயதான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கேர்ச்னர், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் வியாழக்கிழமை (01) நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை பெரும் எண்ணக்கையான ஆதரவாளர்கள் சூழ்ந்திருந்தனர்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒரு நபர், உப ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கேர்ச்னரின் முகத்துக்கு அருகில் கைத்துப்பாக்கியை நீட்டி துப்பாக்கி விசையை அழுத்தினார்.
ஆனால், அத்துப்பாக்கி இறுகிக் கொண்டதால் தோட்டா வெளியேற வரவில்லை. இதனால், கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கேர்ச்னர் உயிர் தப்பினார்.
துப்பாக்கிதாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் 35 வயதான பிரேஸில் பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்நபரின் துப்பாக்கி, சம்பவ இடத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் கைப்பற்றப்பட்டது. அத்துப்பாக்கியில் 5 தோட்டாக்கள் காணப்பட்டதாக ஆர்ஜென்டீன ஜனாதிபதி அல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
இக்கொலை முயற்சிக்கான நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.