நாடீளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், தனக்கு கட்சியின் தலைவர் சமன் பெரேரா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவான வழக்கில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்க அபே ஜன பல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தயாராகி வருகின்றார்.
இது தொடர்பில் இன்று (20) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் சமன் பெரேரா, குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாயத்தின் கீழ் இரகசிய வாக்கு மூலம் வழங்க, தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை முன்வைத்தார்.
எனினும் சமன் பெரேரா குறித்த விவகாரத்தில் பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளாரா என உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிராத நிலையில் அவர் முன்வைத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.
எனினும் சமன் பெரேரா குறித்த விவகாரத்தில் சந்தேக நபரா என்பதை உறுதி செய்ய, விசாரணையாளர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய அறிவித்தல் பிறப்பித்ததுடன் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக சமன் பெரேராவுக்கும் அறிவித்தல் விடுத்தார்.
-எம்.எப்.எம்.பஸீர்