காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வைத்தியர் இன்று (12) காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவர் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தை அடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில் குறித்த வைத்தியர் காலி மேலதிக நீதிவான் லக்மினி விதானகமகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் நீதிவான் விடுவித்துள்ளார்.
குறித்த துஷ்பிரயோகம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருக்காமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி பிணையளித்துள்ள நீதிவான் வழக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ் நிலையம் ஊடாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-எம்.எப்.எம்.பஸீர்