அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவில்லை எனில் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் நாளாந்தம் 10 – 12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டியேற்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிலக்கரி பிரச்சினை தொடர்பில் நாம் தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வந்தோம். விரைவில் அதனை இறக்குமதி செய்யுமாறும் தொடர்ந்தும் வலியுறுத்தினோம்.
தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் ஒக்டோபர் 20 – 25 ஆம் திகதி வரை மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுமெனில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது அத்தியாவசியமானது என்றார்.
-எம்.மனோசித்ரா