மூன்று மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறும் அரச நிறுவனங்களிடமிருந்து 2.5% தாமதக் கட்டணத்தை அறவிட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னர் அரச நிறுவனங்களிடமிருந்து தாமதக் கட்டணம் அறவிடப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, திறைசேரியில் இருந்து நிதியைப் பெற்று அவர்களின் நீர் கட்டணத்தை செலுத்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படும் என்றும், எனினும் மூன்று மாத காலப்பகுதியின் பின்னரே தாமதக் கட்டணம் அறவிடப்படும் என்றும் பத்மநாத தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் கட்டணத்தை செலுத்தாத சபை உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிலுவையை அரவிடுவது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் குடிநீர் கட்டண நிலுவை 13 மில்லியன் ரூபா என அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)