முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11) மாலை தாய்லாந்து சென்றடைந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து வாடகை விமானம் மூலம் தாய்லாந்து நேரப்படி இரவு 8.00 மணியளவில் பாங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்தை வந்தடைந்ததாக நம்பப்படுகிறது.
மனிதாபிமான காரணங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதே நேரத்தில் கோட்டாபய 90 நாட்கள் தங்குவதற்கு இராஜதந்திர பாஸ்போர்ட்டுடன் நாட்டிற்குள் நுழைவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் கூறினார்.
கடந்த ஜூலை 14 அன்று இலங்கையை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய முதலில் மாலைதீவு சென்று, அங்கிருந்தபடி சிங்கப்பூர் சென்றார். தற்போது மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சென்றுள்ளார்.
கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருந்த போது, ஆரம்பத்தில் நகர மையத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், ஆனால் பின்னர் அவர் ஒரு தனியார் இல்லத்திற்கு மாறியதாக நம்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய தங்கியிருப்பது தாய்லாந்திற்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்றும், இந்த முடிவை இலங்கை அரசு எதிர்க்கவில்லை என்றும் தாய்லாந்து அரசு நம்பியது.