ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரினால் இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த வாரம் (24) பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக பலரால் குற்றம் சுமத்தப்பட்டது.
திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் சில நீதிபதிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
"சில நீதிபதிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் இந்த குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பிணை வழங்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.
பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குகளுக்கு உயர் நீதிமன்றத்தில் மட்டுமே பிணை பெற முடியும், ஆனால் பல நீதவான்கள் இப்போது பிணை வழங்குகிறார்கள் என்று மொட்டு எம்.பி மேலும் கூறினார்.
அதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் அசல் காணொளிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதித்துறையை அவதூறாகப் பேசும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டாரா என்பதை அறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணை நடத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)