சமூக ஆர்வலர் பதும் கெர்னரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.
பதும் கெர்னரின் புகைப்படங்கள் இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் பரவலாக வெளியிடப்பட்டதாகவும், எனவே அவர் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டதன் நோக்கம் குறித்தும் கெர்னர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரத்ன இன்று நீதிமன்றில் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சட்டத்தரணியின் கோரிக்கைகளை நிராகரித்த மேலதிக நீதவான் பதும் கெர்னரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
கடந்த ஜுலை 13ஆம் திகதி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெர்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும், பாராளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை அகற்றியதாகவும், கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் ஜூலை 18 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், உடல்நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அணிவகுப்பு என்பது கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக காவல்துறையால் செய்யப்படும் நடைமுறை ஆகும்.
கைது செய்யப்பட்டிருப்பவர் உண்மையிலேயே அந்த நிகழ்வில் ஈடுபட்டார் என்பதை சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு உறுதிசெய்யவும், உண்மையான குற்றவாளிகளைத்தான் கைது செய்திருக்கிறோம் என்பதை புலன் விசாரணை அதிகாரி உறுதிப்படுத்திக் கொள்ளவும் அடையாள அணிவகுப்பு செய்யப்படுகிறது.
அடையாள அணிவகுப்பு மட்டுமே ஒருவரை குற்றவாளியாக உறுதிசெய்துவிட போதுமானதாக ஆகாது என்றாலும் வழக்கு விசாரணையில் இது முதன்மையான சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்படும்.