
அரசுத் துறையில் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் இன்று (30) இடைக்கால வரவுசெலவு அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் இவ்வாறு கூறினார்.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக குறைக்கப்படவுள்ளது எனவும், தற்போது அரச சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இவ்வருடம் டிசெம்பர் 22 ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கமைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை 5 சதவீதத்தினால் அதிகரிக்க முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டமைக்கமைய நிவாரணங்கள் வழங்கப்படும்.
இலங்கை மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலன்கன் எயா லைன்ஸ் தவிர மேலும் 50 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் வெற்றியடைந்துள்ளதோடு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.