கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் இறக்குமதி தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இன்று (02) அதிகாலை வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுங்கப் பிரிவினரால் சோதனையிடப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்களின் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த 3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 ஐபோன்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆறு சந்தேக நபர்களில், 45, 48, 50 மற்றும் 51 வயதுடைய நால்வரும் கண்டி அக்குறணை பகுதியை சேர்ந்தவர்கள்.
இதேவேளை, மேலும் இரு சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பெண்களும் 40 மற்றும் 41 வயதுடையவர்கள்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)