கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குளியாப்பிட்டிய, பிடதெனிய பிரதேசத்தில் நேற்று இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிடதெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அதன் போது நண்பரின் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, நண்பரும் அவரது கூட்டாளிகளும் பாதிக்கப்பட்டவரை மரக் கம்புகள் மற்றும் கத்தியால் தாக்கி, வீட்டிற்கு வெளியே உள்ள விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மூவரில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)