முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்காக பிரதான எதிர்க்கட்சிக்கு புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். அதனால் எதிர்க்கட்சி தலைவர் நாடு தொடர்பில் தீர்மானிப்பாரா அல்லது எதிர்கால தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்று (20) ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"ரணில் விக்கிரசிங்கவின் தைரியத்தில் எழுதப்பட்டதே தற்போது இடம்பெற்றிருக்கின்றது. என்றாலும் இந்த விடயம் பெரும் சவாலுக்கு உரியதாகும். இலங்கை மக்களுக்கு இதன்மூலம் பெரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நினைக்கின்றோம்.
முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்போது எங்களுக்கு பதவிகள் அவசியமில்லை; சரியாக இதனை செய்வார்கள் என்று நினைக்கின்றோம். இதற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டோரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம்.
தற்போது அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். அவர் ஊடாக தேவையானவற்றை செய்யலாம் என்று நம்புகின்றோம். சர்வகட்சி அரசாங்க அமைப்பதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். அதற்காகவே அவர் பிரதான எதிர்க்கட்சி உட்டபட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்தார்.
அதனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாடு தொடர்பில் சிந்தித்து செயற்பாடுவாரா அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல் தொடர்பில் செயற்படுவாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
அத்துடன் இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் 14 உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் 4 அல்லது 5 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம்" என்றார்.