
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சரயு நதி உள்ளது. இது சரயு கங்கையின் ஏழு துணை நதிகளில் ஒன்றாக வணங்கப்படுகிறது. மேலும் ராமர் பிறந்த அயோத்தி, சரயு நதிக்கரையில் அமைந்துள்ளதால், இந்துக்களால் இது புனிதமான நதியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நதியில் குளித்த பின்னர் கோயிலில் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், சரயு நதிக்கரையில் கணவன் – மனைவி தம்பதியினர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, கணவன் ஆசையாக தனது மனைவிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் கணவரை தண்ணீரில் இழுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவரை மீட்க போராடுகிறாள்.
ஆனால் அவர்கள் கணவரை தனியாக இழுத்து சென்று கன்னத்தில் பளார்..பளார் என தாக்கினர். எதற்காக தாக்குகிறார்கள் என்பது கூட தெரியாமல் கணவனும், மனைவியும் செய்வதறியாது முழித்து கொண்டிருந்தனர்.
அப்போது, கூட்டத்தில் ஒருவர் அயோத்தியில் இது போன்ற அசிங்கத்தை பொறுத்து கொள்ள முடியாது என கூறுகிறார். அதன்பின்னரே, இந்த நதியில் வைத்து தனது மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காக தன்னை தாக்கினார்கள் என்பது அவர்களுக்கு புரிந்தது.
பின்னர், அந்த கும்பல் கணவன் – மனைவி இருவரையும் நதியில் இருந்து வெளியேற்றினர்.
மேலும் இது தொடர்பாக அயோத்தி காவல்துறையினரிடம் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்டு அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அனைத்தும், அங்குள்ளவர்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மனைவிக்கு முத்தம் கொடுத்தது தப்பா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (இந்திய ஊடகம்)