இன்று (28) முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை அடுத்து சட்டவிரோத முறையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய சில இடங்களில் ஒரு போத்தல் பெற்றோல் 750 ரூபா முதல் 1,800 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் வரிசையில் காத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த வர்த்தகம் இடம்பெறுகிறது.
இதேவேளை, பசறை, சப்புகஸ்கந்த மற்றும் எதிமலை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 1,740 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளன.
பசறை - டெமேரியா தோட்டத்தில் 60 லீற்றர் டீசலுடன் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன், சியம்பலாண்டுவ - எதிமலே 70ஆம் கட்டை பகுதியில் 1,220 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 60 வயதான ஒருவர் கைதானதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மேல் பியன்வில பகுதியில் 460 லீற்றர் டீசலுடன் 48 வயதான ஒருவர் கைதானதாக அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.