இவ்வருடம் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்புவதற்கு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.
சவூதி அரேபிய அரசாங்கம், இலங்கையிலிருந்து இவ்வருடம் 1,585 யாத்திரிகர்களுக்கு ஹஜ் செய்வதற்கான ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது.
எனவே, பதிவு செய்த மற்றும் நிர்வாக பதிவுக் கட்டணங்களை செலுத்திய யாத்திரிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் "முதல் பதிவுக்கு முன்னுரிமை" என்ற வகையில் யாத்திரிகர்களுக்கு ஹஜ் பயணத்திற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதால், இம்முறை ஹஜ் செய்பவர்கள் தங்களை மிக அவசரமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், காதர் மஸ்தான், இஸ்ஹாக் ரஹ்மான், மர்ஜான் பளில், முஸர்ரப் முதுநவின் ஆகியோரும், அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம் மற்றும் ஹஜ் பயண முகவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட சந்திப்பொன்றின் போது, இவ் வருடம் ஹஜ் யாத்திரைக்கான அரசாங்கத்தின் இணக்கத்தை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதிப்படுத்தினார்.
இச்சந்திப்பில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி நயனா நாதவிதாரண மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், கட்டணமாக நியாயமான தொகையை அறவிடுமாறும் ஹஜ் பயண முகவர் சங்கங்களுக்கு புத்தசாசன மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இவ் வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆர்வமுள்ள இலங்கையர்கள், மிக அவசரமாக பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழே கோரப்பட்டுள்ள விபரங்களை வழங்குமாறும், பின்வரும் கட்டணங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குச் செலுத்தி பணம் செலுத்தியதற்கான உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறும் விண்ணப்பதாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
01. பதிவுக் கட்டணம் ரூ. 4,000/- (ஹஜ் பயண முகவர் மூலம் செலுத்தப்படும்)
02. பயண உறுதிப்படுத்தல் கட்டணம் (மீளளிப்பு வைப்புத் தொகை) ரூ. 25,000/-
03. ஏற்கனவே பதிவு செய்தியிருந்தால், பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டின் பிரதி.
04. செல்லுபடியான கடவுச் சீட்டின் பிரதி.
05. ஹஜ் யாத்திரை நோக்கத்திற்காக 1500 அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கையில் குறித்தொதுக்கப்பட்ட டொலர் கணக்கிற்கு மாற்றுதல் வேண்டும்.
06. பதிவு செய்த மற்றும் நிர்வாக பதிவுக் கட்டணங்களை செலுத்திய யாத்திரிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருப்பினும் "முதல் பதிவுக்கு முன்னுரிமை" என்ற வகையில் யாத்திரிகர்களுக்கு ஹஜ் பயணத்திற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
07. பதிவு செய்யப்பட்ட யாத்திரிகர்களுக்கு தமக்கு விருப்பமான ஹஜ் முகவர்களை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை பொருத்தமான இராஜதந்திர வழிகள் மூலம் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ளவும்.
• எம்.எப்.ஏ.அசாத், அபிவிருத்தி உத்தியோகத்தர், ஹஜ் பிரிவு
தொலைபேசி: 0773775941
• எம்.ஐ.எம்.முனீர், அபிவிருத்தி உத்தியோகத்தர், ஹஜ் பிரிவு
தொலைபேசி: 0761398620
• எம்.எச்.என்.எப்.கரீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர், ஹஜ் பிரிவு
தொலைபேசி: 0776146318.
• எம்.ஏ.சி.எம். றியாஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஹஜ் பிரிவு
தொலைபேசி: 0777895667
-எம்.எஸ்.எம்.ஸாகிர்