பொலிசாரின் தேடுதலின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 100 கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாக பொலிஸார் நேற்று (29) தெரிவித்தனர்.
குறித்த நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த போதைக்கு அடிமையான ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிசாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக கைதிகள் குற்றம் சாட்டினர்.
இதனடிப்படையில், மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பொலிஸ் குழுவொன்று வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வளாகத்தில் இருந்தபோது ஒரு சூடான சூழ்நிலை ஏற்பட்டது, பின்னர் 600 க்கும் மேற்பட்ட கைதிகள் பொது சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர் தப்பியோடினர்.
தப்பியோடிய சுமார் 250 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நேற்று, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், இச்சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சுமார் 1,000 கைதிகள் தங்கியுள்ள இந்த மையத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸாரும் இலங்கை இராணுவமும் ஆரம்பித்துள்ளனர்.