இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
இன்று அவர் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் இதற்கு முன்னர் ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.
அவர் 1993 முதல் 1994 வரை, 2001 முதல் 2004 வரை, 2015 முதல் 2015 (100 நாட்கள்), 2015 முதல் 2018, மற்றும் 2018 முதல் 2019 வரை இலங்கையின் பிரதமராக பணியாற்றினார்.
ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருப்பதுடன், 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதல் 2015 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அவருக்குப் பதிலாக விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)