நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுதந்திரத்தின் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
இன்று எரிவாயு, மருந்து தட்டுப்பாடு மற்றும் மின்தடை குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இதனை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால், இது முழுமையாக இல்லாதுபோகும், அபாயத்திற்கு அருகில் நாம் இருக்கின்றோம்.
கட்சிகளாக பிளவுபட்டு போராடுவதைக் காட்டிலும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இடத்திலிருந்து அதனை மீளக் கட்டியெழுப்பி, இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கான தேசிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
வரி வீதம் அதிகரிக்கப்படவேண்டிய காலத்தில் நாம் வரியைக் குறைத்தோம். இது வரலாற்றுத் தவறு என்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இறுதியில், வெளிநாட்டு ஒதுக்கம் 7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இன்று பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் டொலர் கூட இல்லை. 8 பில்லியன் ரூபா கடந்த ஆண்டில் கடன் செலுத்தப்பட்டுள்ளது என்பதே இதன் அர்த்தமாகும்.
2018 ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை அதியுச்ச நிலையைப் பதிவுசெய்த ஆண்டாகும். 4.4 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது. அது கடந்த ஆண்டில் 200 மில்லியனாக குறைந்தது.
கொவிட் காரணமாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
ரூபாவை இதற்கு முன்னர் கிரமமாக மதிப்பிறக்கம் செய்திருக்கலாம். கடந்த 2, 3 ஆண்டுகளில், வரிகுறைப்பு, சர்வதேச நாணய நிதியத்தை நாடாமை, டொலரின் பெறுமதியை தக்கவைத்துக் கொண்டிருந்தமை, கடன் மீள செலுத்த காலம் எடுத்தமை என்பனவற்றைச் செய்யாது இருந்திருக்கலாம்.
அது இந்த அரசாங்கத்தின் தரப்பில் இடம்பெற்ற தவறாகும். அந்த சுய பரிசீலனையை ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமை தங்களுக்கு உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், 50 ஆண்டுகளின் பின்னர், பாரிய பணவீக்கம் அங்குள்ளது. ஐரோப்பாவும் அவ்வாறே. பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளும் இதற்கு முகங்கொடுக்கின்றன.
ஆனால், அந்த நாடுகளிடம் ஒதுக்கம் உள்ளது. ஆனால், நாம் எமது ஒதுக்கத்தை இல்லாது செய்துகொண்டோம். இதுவே உண்மையாகும்.
இந்த நிலையில், தாம் டெஸ்ட் போட்டிகளில் வரும் நைட் வோட்ச் மேன் (இரவுநேர காப்பாளர்) பணியை செய்வதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் வேதனத்திற்காக மாத்திரம் 845 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஓய்வூதியம், விசேட தேவையுடையோர் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, அத்தியாவசிய மருந்து கொள்வனவு, பாடசாலை புத்தகம் மற்றும் சீருடை உற்பத்தி என்பனவற்றுக்கு 595 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான செலவினமானது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தை காட்டிலும், அதிகமாகும்.
அதேநேரம், 1956ம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது. 1956ம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம்.
அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்தொகைக்கான வட்டியாக 8 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியிருக்கின்றோம்.
நாடு தற்போது பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதனை உடனடியாக தடுத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
விரைவாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இதன் முதற் கட்டமாக, கடன் மறுசீரமைப்புக்கு அவசியமான நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த அமைச்சரவையிலோ அல்லது ஒரு வாரத்திலோ அவர்களை நியமிக்க முடியும். அவர்களை நியமித்ததன் பின்னர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறுசீரமைப்பை செய்வதற்கான இயலுமை கிடைத்தால், மீண்டும் சந்தைக்கான அணுகலைப் பெற்றுக்கொள்வதில் குறைந்தது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வாற்கான இயலுமை ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடும் விடயத்தில் தங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லையென சீன தூதுவர் தெரிவித்திருந்தார்.
எனினும், நேற்று முன்தினம் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சர்வதேச நாணய நிதித்துடனான பேச்சுவார்த்தைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை செல்லும் என நிதியமைச்சர் நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.