தகுதியற்ற ஆன்மீகத் தலைமை, சமூக அக்கறையற்ற அரசியல் தலைமை, இதனால் அழியப்போகும் காதி நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தகுதியற்ற ஆன்மீகத் தலைமை, சமூக அக்கறையற்ற அரசியல் தலைமை, இதனால் அழியப்போகும் காதி நீதிமன்றம்!


முன்னைநாள் நீதி அமைச்சர் அலி சப்ரி  தெரிந்து கொண்டே முஸ்லிம் சமூகத்திற்கு செய்த பிழை பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு பொறுப்புச் செல்வது யார்?

தீர்க்கப்படாத காதி நீதிமன்ற பிரச்சினை தலைமுறை தலைமுறையாக எமது முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொடர்ந்தும் விட்ட பிழைகளால் காதி நீதிமன்றம் சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முங்கொடுத்து வருகிறது.

இதற்கான முதல் காரணம் முஸ்லிம் சமூகத்திற்கு பொருத்தமில்லாத தகுதியற்ற ஆன்மீகத் தலைமைத்துவமும், சமூக அக்கறை கொள்ளாத அரசியல்
தலைவர்களுமாகும். 

ஆனால் காதி நீதிமன்ற விடயத்தில் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டிய, திருத்தப்பட வேண்டிய சட்ட பிரச்சினைகளை அவ்வப்போது திருத்தப் படாமல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா காலம் தாழ்த்தி, இழுத்தடிப்பு செய்ததே இதற்கு முதல் காரணம். இதில் மறுப்பதற்கு இல்லை.

நாடளாவிய ரீதியில் 63 காதிகள் நியமிக்கப்பட்டு இருந்தபோதிலும்,  இதில் தற்போது 18 காதிகள் வெற்றிடங்கள் உள்ளன. இது போக எதிர்வரும் 30ஆம் திகதியுடன் இன்னும் பல காதி  நீதிபதிகளின் பதவிக்காலம் முடிகின்றது. 
மீதி இருக்கும் காதிகளை கொண்டாவது காதி நீதித்துறையை ஒழுங்கமைப்புடன்  இயங்க வைக்க, நீதிச் சேவை ஆணைக்குழுவின் காதிப் பிரிவில் பல வெற்றிடங்கள், காதி நீதிப் பிரிவு இயங்க முடியாத நிலை.

மேலும் பல ஊர்களில் காதிகள் இல்லாத நிலையில் பக்கத்தில் உள்ள பல ஊர்களை இனைத்து ஒரு காதியின் பொறுப்பில் விடப்பட்டள்ளது. இதன் காரணமாக ஒரு காதியால் பல ஊர் மக்களின் பிரச்சினைகளை கைக் கொள்ள முடியாத நிலை, இதனால் பல வருடங்களாக
இன்னல் படும் பல முஸ்லிம் இளம்  குடும்பங்கள்.

உதாரணமாக காலிக்கு காதி ஒருவர் இல்லை. இது  பலபிட்டியைச் சேர்ந்த காதியிம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேருவளைக்கு காதி ஒருவர் இல்லை. இது பண்டாரகம காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் புலம் பெயர்ந்தவர்களுக்கான காதி இல்லை. இதை மன்னார் காதிக்கு ஒப்படைக்க வேண்டிய நிலை. அவிசாவளை பகுதிக்கு காதி வெற்றிடம், இது இரத்தினபுரி காதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதுளையில் காதி வெற்றிடம், இது நுவரெலிய காதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஒரு காதிக்கு சமாளிக்க முடியாத நிலையில் பல பகுதி பிரச்சினைகள். இதனால் பல வருடங்களாக
இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்கள்.

இவ்வாறான பிரச்சினைகளை நமது முன்னைநாள் முஸ்லிம் நீதியமைச்சரிடம் பலதரப்பட்டவர்களால் பல முறை  எடுத்து கூறப்பட்டபோதும், நமது உள்ளங்கையில் வென்னை ஊறிய போது அதை அனுபவிக்கத் தெரியாத சமூகமாக இவ்விடயத்தில் நமது முஸ்லிம் நீதி அமைச்சர் எவ்வித கரிசனையும் கொள்ளாதது நம் சமூகத்தின் மாபெரும் துரதிஷ்டவசமாகும்.

முன்னைய நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் ஒரே நாடு ஒரே சட்டம்,  மற்றும் காதி நீதிமன்றங்கள் இல்லாது  ஒழிக்கப்படல்  வேண்டும் என்ற விடாப்பிடியான ஒரு போக்கில் காணப்பட்டதால், காதி நீதிமன்றத்தில் உள்ள குறைபாடுகளை பிரச்சினைகளை தீர்க்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. காதி நீதிமன்றத்தின் பிரச்சினைகளை அவர் கண் திறந்தும் பார்க்கவில்லை.

இது பலமுறை முன்னைநாள் நீதி அமைச்சரிடம் இவை சுட்டிக்காட்டப்பட்ட போதும்,  காதி நீதிமன்றம் சம்பந்தமாக தன்னுடன் கதைக்க வேண்டாம்.  இவை ஒழிக்கப்பட வேண்டும் என்றே கூறி வந்தார். இதன் காரணமாக காதி நீதிமன்றத்தின் நிலை இன்று கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் ஒரு நிர்வாக கட்டமைப்பில், சட்டங்களில் மாற்றங்கள், திருத்தங்கள் ஏற்படுத்தப்படுமாயின் புதிய வடிவிலான முறைமை நடைமுறைப்படுத்தும் வரையில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத முறையில்
பழைய முறை அமுலில் இருக்கும். இதுவே ஒழுங்கான நிர்வாக கட்டமைப்பின் வழிமுறையாகும்.

ஆனால் முஸ்லிம்களின் காதி நீதிமன்ற முறையில் குறைந்தபட்சம் இந்த நடைமுறையானது பின்பற்றப்படவில்லை.
அதனால் மக்கள் பெருங்கொண்ட துன்ப துயரங்களை எதிர்நோக்கி வந்ததோடு, அதைவிடப் பெரிய கவலையான ஒரு நிலவரத்தை எதிர்நோக்க இருப்பது நமது முஸ்லிம் நீதி அமைச்சரின் துரதிஷ்டவசமான நடவடிக்கையினால் ஆகும்.

தற்போது காதி நீதிமன்ற விவகாரம் இரண்டும் கெட்டான் என்ற நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில்,  காதி நீதிமன்றத்தை கடுமையாக எதிர்த்த விமர்சித்த ஒருவர் தற்போது நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  முஸ்லிம் சமூகத்தின் காதி நீதிமன்ற விவகாரம் அதன் குறை நிறைகள் வெற்றிடங்களில் எந்தளவு தூரம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எந்தளவுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இவை பற்றி நீண்ட விபரமாக எழுதித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மேலும் ஆட்டம் காணும் அரசாங்கமும்,  இழுபறி நிலையில் உள்ள அரச நிர்வாகமும், முஸ்லிம் சட்டத்துக்கு எதிரான அமைச்சரும் அமைந்துள்ள நிலையில், பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களின் நிலை தொடர்ந்தும் நிரந்தர பரிதாபமே.

இவ்வாறான அவல நிலையில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்பது யார்?

அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் தான்தோன்றித்தனமான போக்கும், சமூகத்தின் மீது அக்கறையில்லாத தலைமைகளின் கவனக்குறைவும் முஸ்லிம் சமூகத்தை எந்த அளவு படுபாதாளத்தில் தள்ளி விட்டது என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு புறம் காதிகளின் பற்றாக்குறை , மறுபுறம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் பல காதிகளின் பதவிக்காலம் முடிவடையதல்,  நீதிச் சேவை ஆணைக்குழுவில் காதி நீதிப் பிரிவிற்கான அதிகாரிகளின் பற்றாக்குறை, ஒழுங்கான காரியாலயம் கூட இல்லாத நிலையில் உள்ள காதி நீதிப்பிரிவு,  கெண்டையினர் பெட்டிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில்,  இவை அத்தனையும் மீள் நிரப்பப்படாத, சீர் செய்யப்படாத நிலையில்,  நூறு வீதம் செயல் இழக்கப் போகும் காதி நீதிமன்றங்கள், இதனால் இனிவரும் காலங்களில் காதி விடயங்களில் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கப் போகும் பிரச்சினைகளுக்கும்  இழு பறிகளுக்கும் தகுதியற்ற  ஆன்மீக தலைமையும் சமூக அக்கறையற்ற அரசியல் தலையையுமே பொறுப்புக் கூறல் வேண்டும்.

காதி நீதிமன்ற பிரச்சினைக்கு  தீர்வு காண்பது தொடர்பான விடயம் நீண்டகாலமாக அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பொறுப்பிலேயே இருந்தது.

இன்று ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு முக்கிய காரணம் இது விடயத்தில் அவர்கள் கையாண்ட பொடு போக்கான, கவனயீனமற்ற நிலைப்பாடே ஆகும். அவ்வப்போது தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு தலைமை, தலைமையாக நின்று சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்காமல் இன்று ஏற்பட்டிருக்கும் இந்த அவலமான நிலைக்கு பதில் தருவார்களா?
 
-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.