பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாகவும், சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
"எம்.பி. அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி AFPயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
"ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்தனர், பின்னர் அவர் தனது ரிவால்வரால் தற்கொலை செய்து கொண்டார்."
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து நாடளாவிய ரீதியில் இவ்வாறான அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)