மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஸ்வர்ணா பிரேமச்சந்திர ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் துமிந்த சில்வாவுக்கு பயணத் தடை விதித்ததுடன் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு சில்வாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக துமிந்த சில்வா உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால், கொலைக் குற்றவாளி என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு 2021 ஜூன் 24 அன்று விசேட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியிருந்தார்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர், ஆகஸ்ட் மாதம் சில்வா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாத தொடக்கத்தில், துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் நாடு திரும்பியுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. (யாழ் நியூஸ்)