ஆட்சியை எம்மிடம் தாருங்கள்; நிமிர்த்திக் காட்டுகிறோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆட்சியை எம்மிடம் தாருங்கள்; நிமிர்த்திக் காட்டுகிறோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு!

தமிழ் தரப்பிடம் ஒரு வருடம் நாட்டின் ஆட்சியை தாருங்கள். இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயகத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று (16) வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாகும் தகுதி கோட்டாபாயவிற்கு இல்லை என்று எமதுமக்கள் வாக்குகள் மூலம் அன்றே ஆருடம் சொல்லியிருந்தார்கள். கோட்டாவும், மகிந்தவும் ஆயுதப் போராட்டத்தினைமௌனிக்க செய்ததாக வெற்றிவிழா கொண்டாடினார்கள். ஆனால் சர்வதேசத்தின் உதவியுடன் தான் எமது போராட்டத்தினை மௌனிக்க செய்தார்களே தவிர இவர்களது திறமையால் மௌனிக்கவில்லை என்பதை இன்று விளங்கிக்கொள்ள முடியும்.

இன்று சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும. ஈழத்தை கொடுத்திருந்தால் அது பணத்தை தந்திருக்கும் என்று முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சொல்கிறார்.

அன்று இரத்தினபுரியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோது விடுதலைப்புலிகள் சிங்களமக்களிற்கு உதவிகளை வழங்கியிருந்தனர். அந்த வரலாறை நாம் மறக்க முடியாது. 

எனவே அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற சிந்தனை ஓட்டத்தினை நாங்கள் இன்று செய்தாக வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் சிங்கள மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். தமிழ்தரப்பிற்கு ஆட்சியினை ஒருவருடம் வழங்குங்கள் ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக்காட்டுகின்றோம். தமிழ், சிங்கள மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கும் படியாக எமது செயற்பாடு இருக்கும். அதை நாங்கள் எமது போராட்ட காலங்களில் நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.

ஜே.ஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி முறை எங்களுடைய தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் தான் நெருக்குதலாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை தமிழ் பேசும் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் வாடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் இன்றும் போராடுகிறார்கள். நிலங்கள் பறி போகிறது. ஒருவர் தனது அதிகாரங்கனை கூடுதலாக வைத்திருப்பதால் எங்களது செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிலர் ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போது தான் தமிழர்களின் ஆளுமையை காட்ட முடியும். அப்போது தான் வாக்கு பெறுவதற்காக தமிழ் மக்கள் பற்றி சிந்திப்பார்கள் என்கிறார்கள். கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களை தமிழ் மக்களது வாக்கு தான் ஜனாதிபதியாக்கியது. அவர் என்ன செய்தார். பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்தார். ஆனால் அவர் தன்னுடைய அதிகாரத்தை தமிழ் மக்களுக்காக பயன்படுத்த தவறி விட்டார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதி ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதாக சொன்ன போதும் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. அவர் சில மாற்றங்களை கொண்டு வந்த போதும் செயல் வடிவில் எதுவும் செய்யவில்லை. தமிழர்கள் வாக்கு போட்டு ஜனாதிபதியாக வந்து அந்த கதிரையில் அமர்ந்தால் தமிழர்களை மதிக்காத நிலைமை தான் காணப்படுகின்றது. சந்திரிக்கா அம்மையார் இன்று தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அவர் அன்று ஜனாதிபதியாக இருந்த போது என்ன செய்தார். ஜனாதிபதி முறை என்பது தமிழ் தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முறையாகவே இருக்கிறது.

ஆகவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என சிங்கள சகோதரர்களிடமும், ஆட்சியை மாற்ற நினைபவர்களிடமும் நிபந்தனை வைக்க வேண்டும். அத்துடன் சாதாரணமாக சிறைகைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நிலங்கள் அபகரிப்பு என்பவற்றுக்கான உத்தரவாதத்தை பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த வேண்டும். எழுத்து மூலத்தில் அவர்கள் செய்வதாக பெற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆராய இருக்கின்றோம். ஏற்கனவே நல்லாட்சியில் எங்களுக்கு கெட்ட பெயர் இருகிறது. இந்த விடயத்தில் சரியான முறையை கையாள வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் பேசும் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து நிபந்தனையை விதித்து, எங்களது தேசத்தில் குறிப்பிட்ட அங்கீகாரத்தை பெறுவதன் மூலமே ஆதரவு வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். உடனடியாக சென்று கையொப்பம் இடும் நிலை இருக்க கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று தலைவர்களும், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோர் இணைந்து ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்துள்ளோம். இந்த விடயம் மட்டுமல்லாது நான் கூறிய விடயங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ஆட்சியாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். 

வெறும் ஜனாதிபதி வீட்டே போ என்பதும், ராஜபக்ஸ குடும்பம் வீட்ட போ என்பதும் எங்களது கோரிக்கை அல்ல. ஏற்கனவே நாங்கள் இவர்களை நிராகரித்தவர்கள். எங்களது கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் தருகிறார்களோ, அவர்களுடன் இணைந்து பேரம் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

-தமிழ் பக்கம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.