பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (70) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி விலக்கப்பட்ட, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இம்ரான் கானின் இடத்திற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
69 வயதான கானின் கூட்டணி கட்சிகள் கைவிட்ட நிலையிலேயே அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததோடு, நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையிலேயே இம்ரான் கான் தனது பதவியை இழந்தார்.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 172 பேர் வாக்களித்தால் பிரேரணை நிறைவேறும் நிலையில், 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த அமர்வை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட பி.எம்.எல்-என் கட்சியின் அயாஸ் சாதிக், வாக்கெடுப்பு முடிவை அறிவித்திருந்தார்.
ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷரீபின் இளைய சகோதரராவார். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்த நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக விடுதலை பெற்ற நிலையில் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
அரசியல் அனுபவம் பெற்ற ஷெபாஸ் ஷெரீப் இதற்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக 3 முறை பதவி வகித்துள்ளார் என்பதுடன், பஞ்சாப் மாகாணத்தில் நீண்ட காலம் பதவி வகித்தவராக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷரீபை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு அமைய, அந்நாட்டு பாராளுமன்றம் இன்று (11) திங்கட்கிழமை கூடி, புதிய பிரதமரை தெரிவு செய்துள்ளது.
முன்னதாக, இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பு நாளில் பிரேரணையை நிராகரித்த அந்நாட்டு முன்னாள் பிரதி சபாநாயகர், அதனை வெளிநாட்டு சதி எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் ஆலோசனைக்கமைய அந்நாட்டு ஜனாதிபதியினால் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தது.
குறித்த விடத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், மீண்டும் குறித்த வாக்கெடுப்பை நடாத்தும் உத்தரவை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.