அரச சேவை, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், கல்வி, தபால் துறை உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுமார் 1000 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் பதவி விலகக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று பல பொதுத்துறை சேவைகளை முடக்குவதற்கு வழிவகுக்கும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு எதிரே நடத்தப்படும் போராட்டங்களுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழக பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து கல்விசாரா ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுமார் 50 சதவீத மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர், எனினும் மருத்துவமனைகளின் சேவைகள் பாதிக்கப்படாது. பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் கருப்பு உடை அணிவார்கள்.
இன்று நண்பகல் முதல் அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பாகவும் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்படும்.
இதேவேளை, தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன பேரணியொன்று நண்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரே நடைபெறவுள்ளது.
மேலும், தொழிற்சங்கங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் போன்ற பல இடங்களில் இருந்து பேரணியாக சென்று காலி முகத்திடல் போராட்ட தளத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.