பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆறு இலங்கையர்கள் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தியாவின் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகில் உள்ளதால், இறுதிக்கட்டப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி வழியாகத் தமிழகத்துக்குத் தப்பிச் சென்று மறுவாழ்வு முகாம்களில் தங்கினர்.
இந்நிலையில், மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிக்ளரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட நான்கு மாத கைக்குழந்தை உட்பட 06 பேர் நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இன்று (22) அதிகாலை 1.00 மணியளவில் தனுஷ்கோடிக்கு அருகில் வந்துள்ளனர்.
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் இலங்கை தமிழர்களை சிறைபிடித்தது. அவர்கள் அளித்த அறிக்கையில், அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக தப்பி வந்ததாக தெரிவித்தனர்.
அனுமதியின்றி தமிழகத்திற்குள் பிரவேசித்த 6 இலங்கையர்கள் மீது இந்திய மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)