இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வின் போது, இலங்கைக்கு சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவையும் அனுதாப அணுகுமுறையையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளை, முடிவுகள் சார்ந்த பன்முகக் கூட்டாண்மையாக மாற்றுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிவிவகார அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
விவசாயத்தில் வெளிநாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் துறைமுக நகரங்களுக்கு அருகில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஜனாதிபதி ராஜபக்ஷ, குறைந்த பணப்பரிவர்த்தனையின் தாக்கம், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி, வறண்ட காலநிலையினால் மின்சார உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் தேவை என்பனவற்றை சுட்டிக்காட்டினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமது நாடும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)