ஜனாதிபதியை விமர்சிக்கும் சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி, பரமி நிலேப்னா ரணசிங்க எனும் யுவதியொருவரே இவ்வாறு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சிக்கும் பதிவொன்றை தனது தனிப்பட்ட முகநூலில் பகிர்ந்ததற்காக தொலைக்காட்சி தொகுப்பாளினியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இடைநீக்கம் செய்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஜனாதிபதி குறித்த பதிவே காரணம் என குறிப்பிடப்பட்ட பரமி நிலேப்னா ரணசிங்க தனது இடைநீக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், பரமி நிலேப்னா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய SLRC எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்கம், இது கருத்து சுதந்திரம் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இது இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சி என சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)