இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் "கவனமாக இருங்கள், பொருளாதார நெருக்கடி" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் 22 புள்ளிகளுடன் பரவிவரும் செய்தி போலியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறானதொரு செய்தி பொலிஸாரால் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை எனவும், இவ்வாறான போலிச் செய்திகள் பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் திணைக்களம் பொது மக்களுக்காக ஏதேனும் தகவல்தொடர்பு அல்லது செய்திகளை வெளியிட விரும்பினால், அது பொலிஸ் ஊடகப் பிரிவினால் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பு மூலம் வெளியிடப்படும் என்று அது மீண்டும் வலியுறுத்தியது.
இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இந்தப் போலிச் செய்திகளை உருவாக்கியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)