எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தெஹிவளையிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கலகிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரும் சம்பவத்தில் காயமடைந்து தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபரின் தந்தை மற்றும் சகோதரரும் கலகிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தாயார் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 7.00 மணியளவில் கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மானவத்தை மாவித்தர பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி தனது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போது பாதுகாப்பற்ற முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியை எச்சரிக்கச் சென்ற போதே இந்த மோதல் ஆரம்பமாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அவரது வீட்டுக்குச் சென்று காமினி லொக்குகேவின் சாரதியை பொல்லு மற்றும் வாளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பிலியந்தலை, மாவிட்டரையைச் சேர்ந்த 41 வயதான எபசிங்ககே கயான் கனிஷ்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற அமைச்சர் காமினி லொகேவும் அந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். (யாழ் நியூஸ்)