அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை (Credit Line) கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளன.
2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.
இதனால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்குகட்டணம் செலுத்துவதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை உலக நாடுகளின் உதவியை நாடிவருகிறது.
இதேவேளை, முன்னதாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான ஒப்பந்தம் கடந்த 17 ஆம்திகதி புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டது.
இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இலங்கை மேலும் ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.