உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சஹ்ரான் குழுவினருடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 8 பேர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (15) கெப்பித்திகொல்லாவ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவர்களை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பதாக நீதிவான் அறிவித்தார்.
இவர்கள் மீது சுமத்தப்பட்ட எந்தவித குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரங்கள் இல்லை என்பதால் இவ்வழக்கை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏலவே நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது. இந் நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படைவாத மதக் கொள்கைகளைப் பரப்பியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2019 மே மாதம் 24 ஆம் திகதி ஹொரவப்பொத்தான பொலிஸார் ஐவரைக் கைது செய்தனர். அதே காலப்பகுதியில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்ட 6 மாதங்களின் பின்னரும் ஒருவர் இரண்டரை வருடங்களின் பின்னரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே இவர்களில் 8 பேர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் கைது செய்யப்பட்ட சமயம், இவர்களில் 5 பேரின் வங்கிக் கணக்குகளில் சுமார் 100 கோடி ரூபா பணம் இருந்ததாக சிங்களப் பத்திரிகை ஒன்று போலியான செய்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி