தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நுகேகொடை, தெல்கந்தவில் நேற்று (23) பேரணியொன்று ஆரம்பமானது.
"மக்களை கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம், 74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" ஆகிய தொனிப்பொருளின் கீழ் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து, பேரணி நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளி அரங்கினை வந்தடைந்ததையடுத்து மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய சர்வகட்சி மாநாட்டுக்கு எமக்கும் அழைப்பு கிடைத்தது. அங்கு சென்றால் நீங்கள் செய்தது போதும் வீட்டுக்குச் செல்லுங்கள் என்றே நாம் கூறுவோம்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து மக்களை நெருக்கடிக்குள் தள்ளிய ஆட்சியாளர்களுடன் நாட்டை கட்டியெழுப்புவது குறித்து என்னவென்று கலந்துரையாட முடியும்.
"அரசாங்கமே வீட்டுக்குச் செல்" என்று இங்கு கூடியுள்ள கூட்டம் கூறுகிறது. இப்படி கூறினால் அவர்கள் எதனையும் உணரமாட்டார்கள்; எனினும், நாம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம்; அந்த வழியும் எமக்கு நன்றாக தெரியும் என்றார்.