அல்லாஹ்வின் அருளால் நாம் ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இது அருள்மிகு ரமழான் மாதத்திற்குத் தயாராகும் காலப் பகுதியாகும்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹுதஆலா சங்கையான அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும் சதகாவினதும் மாதமாகும்.
ரமழானில் கடைபிடிக்க வேண்டிய சமூக வழிகாட்டல்கள்:
01. நம் நாடு பொருளாதார ரீதியில் பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் நாம் ரமழான் மாதத்தை அடைய உள்ளோம். அதிகமாக தான, தர்மங்கள் வழங்கும் மாதமான ரமழான் மாதத்தில் எமது செலவினங்களை அத்தியவசியமான தேவைகளோடு மாத்திரம் சுருக்கிக் கொண்டு ஏழைகள் மற்றும் அயலவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்துதல்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ரமழான் மாதத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் இருந்தார்கள். (நூல்: புகாரி 006)
02. பலர் தமது அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாது கஷ்டப்படும் இத்தருணத்தில் எமது வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை ஏழைகள் மற்றும் அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.
03. பொருளாதார ரீதியாக தன்னையும் தனது குடும்பத்தையும் சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொருவரும் திட்டமிட்டு செயற்படுவதோடு, ஆடம்பர இப்தார்களையும் வீண் விரயங்களையும் தவிர்ந்து கொள்ளல்.
04. வீடுகளில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போதும் ஸஹர் நேரத்திலும் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும்படி வைத்துக் கொள்ளல்.
05. மஸ்ஜித்களில் அமல்களை ஏற்பாடு செய்யும் போது கண்டிப்பாக மஸ்ஜிதுக்குச் சூழ இருக்கும் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல்.
06. மஸ்ஜிதுக்கு வாகனங்களில் வருபவர்கள் அதனை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு நடந்து கொள்ளல்.
07. மஸ்ஜித்களில் இபாதத்கள் மற்றும் கஞ்சி, உலர் உணவு பொதிகள் வினியோகித்தல் போன்ற சமூகம்சார் விடயங்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவதுடன், இது குறித்து வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல்களையும் அறிவித்தல்களையும் மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் இது விடயத்தில் மஹல்லாவாசிகள் பொறுப்பாக நடந்து கொள்வதுடன் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு தங்களது ஒத்துழைப்பையும் வழங்குதல்.
08. இக்காலப்பகுதியில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் வீணாக விழித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழிகாட்டுவதில் உலமாக்கள், பிரதேச மக்கள் என அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அவர்களது கால நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான முறையில் அமைவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.
09. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் சர்ச்சைபட்டுக் கொள்ளாது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களைப் பெற்று செயற்படல்.
(ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் துரித இலக்கம் 0117490420 - வார நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை)
• அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள 'மன்ஹஜ்' மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான ஜம்இய்யாவின் நிலைபாடுகளும் வழிகாட்டல்களும் என்ற ஆவணத்தை வாசித்து நடைமுறைப்படுத்தல்.
இணைப்பு: https://acju.lk/news-ta/acju-news-ta/item/2402-manhaj-tamil
• அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட 'சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை' எனும் நூலை வாசித்து பயன்பெறல்.
இணைப்பு: https://acju.lk/published/item/2442-social-unity?highlight=WyJwdWJsaWNhdGlvbnMiXQ==
10. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளல். இந்த ரமழானை இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அருளான ரமழானாக ஆக்கிக் கொள்வோமாக...
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் தத்தம் பிரதேசத்தில் காணப்படும் மஸ்ஜித்களில் மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரக்கூடிய ஜுமுஆ தினத்தில் பொது மக்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.