திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா சர்ச்சை மாத்திரமின்றி முஸ்லிம் மாணவிகள் பாடசாலை வளாகத்தினுள் பர்தா (தலையை மறைக்கும் ஆடை) அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு பாடசாலையினுள் சென்றவுடன் பர்தாவை கழற்றும் நடைமுறை உள்ளதாகவும் அறிகிறோம். இது எவ்வையான சட்டம். இலங்கையிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு சட்டமும், திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கும் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கும் ஒரு சட்டமும் இருப்பது ஏன் என கிழக்கின் கேடயம் கேள்வியெழுப்பியுள்ளது.
திருகோணமலைக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த கிழக்கின் கேடயத்தினர் சம்பவங்களை கேட்டறிந்த பின்னர் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்கள், முஸ்லிங்களின் ஆடைக்கலாச்சாரம் என்பது பெண்களின் பாதுகாப்பையும், உரிமையையும், சுதந்திரத்தையும் வலியுறுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. பாடசாலையில் ஆண் ஆசிரியர்களும் கற்பிக்கின்றனர். இஸ்லாமிய வரையறைகளை மட்டுமின்றி எமது சுதந்திர நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்திய மத சுதந்திரத்தை மீறி நடக்கும் இந்த செயற்பாடானது இலங்கையின் அடிப்படை மனிதஉரிமை மீறலாகும்.
திருகோணமலை சண்முகா வித்தியாலய அதிபர், ஹபாயா அணிந்து வந்த ஒரு முஸ்லிம் ஆசிரியைக்காக அவருடைய ஆடை சுதந்திரத்துக்கு அப்பால் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பையும் புறக்கணித்து மனித உரிமை ஆணையகம் வழங்கிய தீர்ப்பையும் அவமதித்து கல்விசார் சமூகத்தையும் இழிவு படுத்தி பாடசாலை மாணவ மாணவிகள் மத்தியிலும் கொண்டுசென்று வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததானது இந்த நாட்டின் சட்ட ஒழுங்கை மீறிய செயலாகும்.
எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகளும் இப்படியா இன வன்முறைகளில் மாணவர்களை தூண்டி ஈடுபடுத்துமானால் கல்விசார் சமூகத்துக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இந்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு என்ன மதிப்பிருக்கிறது. இப்படியான பிரச்சினைகள் ஏனைய பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் மட்டத்திலும் தொடராமல் இருக்க பொறுப்பு வாய்ந்த சண்முகா வித்தியாலய தலைமை ஆசிரியை விடயத்தில் பாரபட்சமின்றி சட்டம் சரியான நீதியை வழங்க வேண்டும்.
சிங்கள- தமிழ்- முஸ்லிம்- கிறிஸ்தவ உறவில் விரிசலை உண்டாக்கி நாட்டை சீரழித்து கல்வி சமூகத்தை கேள்விக்குட்படுத்தும் எவ்வித உள்நாட்டு, சர்வதேச அஜந்தாக்களுக்கும் இலங்கையர்களாகிய நாங்கள் அனுமதிக்க முடியாது. சண்முகா சர்ச்சையின் பின்னணியில் மிகப்பெரிய இனவாத வலைப்பின்னல் பின்னப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் ஐயா இனவாதிகள் போன்று அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். சாணக்கியன் போன்ற இன்னும் சில தமிழ் எம்.பிக்கள் இந்த விவகாரத்தை அலட்சிய போக்குடனான அணுகுமுறைகளுடாக பார்க்கிறார்கள்.
தேசிய பாடசாலையாக உள்ள இந்த பாடசாலை விவகாரத்தில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர், மக்கள் பாதுகாப்பு அமைச்சர், நீதியைமைச்சர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு நாட்டின் இறையாண்மையையும், கட்டுக்கோப்பையும் பாதுகாக்கவேண்டியுள்ளதால் உரிய பக்கச்சார்பின்றிய நியாயத்தை பாதிக்காப்பட்ட தரப்பிரனருக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சாதாரணமாக கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் தலையிட்டு இந்த பிரச்சினை ஆரம்பித்த காலத்திலையே சுமூகமாக முடித்திருக்கலாம். அவர்களின் அசமந்தமான அல்லது மறைமுகமான அலட்சிய போக்கே இந்த சம்பவம் இவ்வளவு விஸ்பரூபம் எடுக்க காரணம் என்றனர்.
-மாளிகைக்காடு நிருபர்