எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள், நாளை (07) வரையில் மாத்திரமே போதுமானதாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக நாளாந்தம் மின்சார கேள்வி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேங்கங்களின் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால், நீர் மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மவுஸாக்கலை நீர்த்தேக்கத்தில் குழாய் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக 90 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்குள் இணைக்கும், புதிய லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 10 மெகாவோட் மின்சாரமே கிடைக்கப்பெறுவதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய மின்சார கேள்வியினை நிவர்த்திப்பதற்கு 500 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு உள்ள நிலையில், தேவைக்கேற்றவாறு தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு மின் சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, மின்சார தேவைக்கு அமைய மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவுக்கேற்ப பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய தரவுகள் சேகரிக்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும். மின்னுற்பத்தி தேவையான மூலப் பொருட்களின் அளவு, மின்சாரத்திற்கான தேவை மற்றும் விநியோகம் என்பவற்றின் அளவுகள் கவனத்தில் கொள்ளப்படும்.
இதற்கமையவே மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
சுமார் 2,750 மொவொட் மின்சார தேவை காணப்படுமாயின் மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும். தற்போது அந்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.