நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையினை கடமையேற்க விடாது தடுத்து நிறுத்தியமை நீதிமன்ற நியாயாதிக்கத்தின் மீது விடுக்கப்படுகின்ற சவலாகும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ,
2018 ஏப்ரல் மாதம் ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இன்று (2) மீண்டும் பாடசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளார்
பாடசாலைக்குள் கூடியிருந்த தரப்பினர் சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆசிரியையை கடமையேற்க விடாது தடுத்துள்ளதுடன் தகாத வார்த்தைகள் கூறி இம்சித்தும் உள்ளனர். ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசி பறிக்கப்பட்டு கழுத்தை நெரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஆசிரியையின் கணவர் ஆசிரியர் முகம்மட் றமீஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் எமது ஊடகப்பிரிவுக்கு விளக்கம் அளித்துள்ளதுள்ளார். நடந்த நிகழ்வு தொடர்பான காணொளியும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட ஆசிரியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியை தம்மைத் தாக்கியதாகக் கூறி பாடசாலை அதிபரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியை செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு 19 பக்க அறிக்கையொன்றினை மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீதிமன்றம் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியையினை மீள ஷண்முஹாவிற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.
சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தற்போது தற்காலிகமாகப் பணியாற்றும் திருகோணமலை ஸாகிரா தேசிய பாடசாலையிலிருந்து தான் மீண்டும் ஷண்முஹாவிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் ஷண்முஹாவிற்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.
குறிப்பிட்ட விவகாரம் சட்டமா அதிபரின் கவனத்திற்கும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் யாப்பின் கலாசார உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதோடு ஆசிரியர் ஒழுக்கக் கோவை ஹபாயா அணிவதற்கு எந்த தடையினையும் விதிக்கவில்லை எனக் கூறியுள்ள நிலையில் சட்டத்தையும் கலாசாரத்தையும் ஒருசிலர் கையிலெடுத்துச் செயற்படுவதனை நாம் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் ஆசிரியர்கள் மிகவும் அந்நியோன்யமாக நிருவாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றில் தமிழ் ஆசிரியர்கள் அவர்களது கலாசார ஆடைகளுடனே வருகை தருகின்றனர். இதனை மாற்றியமைக்க யாராவது கூற முற்பட்டால் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அவ்வாறே குறித்த விடயத்தினையும் நாம் ஒருபோதும் அங்கீகரிக்க முடியது
இவ்விடயத்தில் தமிழ் கல்வியலாளர்கள் உடனடியாக செயற்பாட்டில் இறங்கி சுமூகமான நிலையினை ஏற்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டை சம்மந்தப்பட்ட தரப்பினர் வெளிப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கான நீதியினைப் பெற்றுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விட்டு விட்டு தன்னிச்சையான ஆர்ப்பாட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு சம்பவத்தை வேறுவடிவமெடுக்க வைப்பது தொடரான பாதிப்புக்களை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூருள் ஹுதா உமர்