வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் நீண்ட தூரம் கைகோர்த்துப் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் திருகோணமலை சண்முகா பாடசாலை விடயம் இந்த இரு சமூகத்தையும் பிரித்து விடக் கூடாது. இந்த விடயத்தை தமிழ் புத்தி ஜீவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு சமூகத்தின் கலாசார ஆடையைக் கூட அனுமதிக்காத தமிழ் சமூகத்திடம் இருந்து எவ்வாறு நாங்கள் வேறு உரிமை சார்ந்த விடயங்களை எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை முஸ்லிம் சமூகத்தினர் எங்களிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான கேள்விகளுக்கு எங்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரு சமூகமும் இணைந்து முகங்கொடுத்து தீர்வு காண வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்காக இரு சமூகமும் ஒன்று பட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இவ்வாறான சிறு சிறு பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி சமூகத்தை பிரிக்கும் செயற்பாடுகளை சிலர் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றனர்.
இது நாம் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டத்தை இன்னும் நீண்ட காலத்திற்கு தாமதப்படுத்தி விடும். இதனால் பாதிக்கப்படப் போவது இரு சமூகத்தினரும் தான் என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
குறித்த பாடசாலை அபாயா விவகாரத்தில் நீதிமன்றத்தில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கல்வி அமைச்சின் பணிப்பின்படி கடமைக்கு சமூகமளித்த ஆசிரியையை ஒப்பமிட அனுமதிக்காது தாமதிக்க வைத்ததன் காரணம் என்ன? இந்த விவகாரத்தில் உடனடியாக வெளியார் எப்படி வந்து தலையீடு செய்தார்கள்? மாணவிகள் உடனடியாக பாடசாலையை விட்டு வெளியேறியமைக்கான பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கான விடையைத் தேடினால் இந்தப் பிரச்சினைக்கான தோற்றம் எது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
முஸ்லிம்கள் தமது கலாசார ஆடையுடன் கற்பிப்பதால் ஏதாவது பிரச்சினை உண்டா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது பிரச்சினையை இனங்கண்டால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும். இதனை விடுத்து முஸ்லிம்கள் அவர்களது உடையுடன் பாடசாலைக்கு வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே, தமிழ் புத்தி ஜீவிகள் இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணர்வுகளுக்கு அடிமைப் படுவதனால் ஏற்படும் இழப்புகள், பாரதூரங்கள் பற்றிய தெளிவை சமூகத்திற்கு வழங்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய நீண்ட பாதையில் இவை போன்ற விடயங்கள் தடைக்கற்கள் என்பதை உணர்த்த வேண்டும்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகமும் - முஸ்லிம் சமூகமும் பிரிந்து நின்று வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது நிலையான தீர்வுத்திட்டங்களை அமுல் படுத்தவோ முடியாது என்பதை கடந்த கால அனுபவங்களின் ஊடாக நாம் கற்றுள்ளோம். இந்த நிலை இன்னும் நீடிக்க வேண்டுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இந்த இரு சமூகத்தினரும் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு நிற்பது பிரித்தாள நினைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது காலத்தின் தேவையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.