ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மத்திய கொழும்பை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் தயாராகுமாறு, ஸ்ரீல.சு.க. வின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பைஸர் முஸ்தபா அறை கூவல் விடுத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய கொள்கைகளைக் கொண்ட ஒரு பழமை வாய்ந்த கட்சியாகும். எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு, கட்சியின் வெற்றியை மேலும் உறுதியாக்கிக் கொள்ளும் என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கீழ் மட்டத்திலான அரசியலில் ஈடுபட தான் ஒருபோதும் விரும்பவில்லை. நேர்மையான அரசியலில் ஈடுபடவே நான் எப்போதும் விரும்புகிறேன் என்றும் அவர் சூளுரைத்தார்.
ஸ்ரீ.சு. கட்சியின் கொழும்பு மாநகர உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, மத்திய கொழும்பு அமைப்பாளர் பைஸர் முஸ்தபா தலைமையில், கொழும்பு மருதானையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கும்போதே பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து அங்கு குறிப்பிடும்போது,
மத்திய கொழும்பு என்பது, கொழும்பின் இதயமாகும். எனவே, அந்த இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வது நமது அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
இன்று மத்திய கொழும்பு எல்லைக்குள்ளேயே வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.
நாம் சொல்வதுடன் மாத்திரம் நின்று விடாமல், இவ்வாறானவர்களைத் தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுவது எமது தலையாய கடமையாகும்.
மக்கள் எப்போதும் எம்முடன் இருக்க வேண்டும். அதற்கு மக்களின் உள்ளங்களை முதலில் கொள்ளை கொள்ள வேண்டும். இதுதான் எமது இன்றைய தேவை. இதற்காக நாம் ஒவ்வொருவரும் எம்மை அர்ப்பணித்துச் செயற்பட முன்வர வேண்டும்.
நான் கீழ் மட்டத்திலான அரசியலில் ஈடுபட ஒருபோதும் விரும்புவதில்லை. பொறுப்பு வாய்ந்த நேர்மையான அரசியலில் ஈடுபடவே எப்போதும் விரும்புகிறேன். எமக்கு மக்கள் சமூகம் தேவை. மக்களுக்கு நாம் தேவை. இது தான் உண்மை. உண்மையைப் பொய்ப்பிக்காமல் வாழ்வதே சிறந்தது என்றார்.
-ஐ. ஏ.காதிர் கான்
மினுவாங்கொடை நிருபர்