திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் தாக்கப்பட்டமை, சைவப் பெண்கள் பாடசாலையில் ஹபாயாவுடன் சென்ற ஆசிரியையின் தான்தோன்றிதமான செயலை சைவ மகா சபை வன்மையாகக் கண்டிப்பதாக சைவ மகாசபை தெரிவித்துள்ளது.
சைவ மகாசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இலங்கையில் அனைத்து மதங்களும் அவர்களின் பின்னணியுடன் உருவாக்கப்பட்ட பாடசாலைகளிற்கும் அவர்களின் சிறப்பு மரபுரிமைகளை பின்பற்ற உரிமை உண்டு என்றால் தமிழ்ச் சைவப் பாடசாலைகளிற்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது
சைவ வித்யா விருத்திச் சங்கம், இந்துக் கல்லூரிகள் சபை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் அரசாங்கத்திடம் கையளிக்கும் போது சைவ சமயத்தவர்களின் தனித்துவம் இப் பாடலைகளில் மீறப்படாது என்றும் வேறு மத புகுத்தல்கள் அனுமதிக்கப்படாது என்றும் உறுதி மொழி பெற்றுக் கொள்ளப்பட்டே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று மத பின்னணி உள்ள முன்னணி பாடசாலைகளில் மதகுருமாரே அதிபர்களாக உள்ளனர். சில சமயங்களில் அதிபர் பதவிக்காக அந்த மதத்தை தழுவ நிர்ப்பந்தங்கப்பட்டும் உள்ளனர்.
இது இவ்வாறு இருக்க இலங்கை முழுவதும் வழமையுள்ள ஆசிரியைகள் சேலை அணிந்து வரும் மரபை அண்மை காலத்தில் மாற்றம் செய்துள்ள குறித்த மதத்தினர் சைவப் பாடசாலைகளிலும் அதனை புகுத்த முனைவது சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைவது ஆரோக்கியமானது அல்ல.
இதற்கு பின்னணியில் மதத்தின் கரங்கள் இயங்கினால் தமிழ்ச் சைவர்களும் தமது பாரம்பரிய கல்லூரிகளின் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.