உக்ரைன் பதற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று சில மணி நேரத்தில் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, உக்ரைன் மீதான பதற்றச் சூழ்நிலைக்கு மத்தியில், நேர்மையான பேச்சுக்கள் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக ரொயட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்று எச்சரிக்கையின் மத்தியில், விரோதத்தை தவிர்ப்பதற்காகவே பைடனும், புட்டினும் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க உக்ரைனில் இருந்து தமது தூதரக பணியாளர்களில் பெரும்பாலானோரையும், பொதுமக்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அவுஸ்திரேலிய, நியுஸிலாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் தமது குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கோரியுள்ளன.
இதேவேளை, ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால், அங்குள்ள பிரித்தானிய பொதுமக்களை மீட்கும் வகையில் விமானங்களை பயன்படுத்த முடியாது என்று பிரித்தானிய ஆயதப்படைகள் அமைச்சர் James Heappey எச்சரித்துள்ளார்.
எனவே அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் உக்ரைனில் இருந்து பிரித்தானிய பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
எனினும், சுமார் ஒரு லட்சம் படையினரை யுக்ரெய்ன் எல்லையில் நிறுத்தியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்று தொடர்ந்தும் தெரிவித்து வருகிறது.