அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையிலான மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் அடங்கிய பொதுமக்கள் இன்று (02) கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவு, நகர அபிவிருத்தி அதிகாரசபை அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் பிரதான கதவை மூடி, வழிமறித்து தமது சுகாதார பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரி குறித்த இடத்தில் அமர்ந்திருந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பகல் பூராகவும் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த நிலையில் சகலதும் தோல்வியில் முடிந்ததை அடுத்து இன்று மாலை குறித்த வீட்டுத்திட்ட கழிவுக்குழி பிரச்சினை தொடர்பான கூட்டம் அம்பாறை அரசாங்க அதிபர் எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று 2022/02/02 ஆம் திகதி புதன்கிழமை 4. 30 மணிக்கு இடம்பெற்றது .
இதில் கலந்து கொண்ட அம்பாறை அரசாங்க அதிபர் எம்.ஏ.டக்ளஸ், கல்முனை ஸ்ரீ சுபத்திரா விகாராதிபதி ரன்முதுகல தேரர், கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம். றக்கீப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை மாநகர சபைபொறியியலாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார் , பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன், பீ. சந்திரன் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் தற்போழுது எழுந்துள்ள இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட கழிவு நீர் முகாமைத்துவ தொகுதி செயழிலந்துள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் சபையில் எடுக்கப்பட்டது.
தற்காலிக தீர்வாக உடனடியாக மாநகர சபை கழிவகற்றும் வாகனம் மற்றும் ஊழியர்களை கொண்டு குழியினை சுத்தப்படுத்தி பொது வடிகானுக்குள்ளும் வீதியிலும் சேர்வதை உடன் கட்டுப்படுத்தல் என்றும் நீண்ட கால் தீர்வாக எதிர்வரும் 05 மாதங்களுக்குள் இஸ்லாமாபாத் கிராமத்திற்கு கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் 07 மில்லியன் நிதியினை கொண்டு 10 வீட்டிற்கு ஒரு தனிக்குழி அமையும் வகையில் தனித்தனி குழிகளை அமைத்தல் என்றும் அமைக்கப்பட்ட பின்னர் அந்தந்த குழிகளை வீட்டுத்திட்ட வதிவிட குடும்பங்களுக்கு இலக்கமிட்டு பாரப்படுத்தி அதன் . பின்னர் தொடந்தும் அந்த குழியினை பராமரிக்கும் பொறுப்பினை அந்த அந்த தொடர்புடைய குடும்பங்களுக்கு வழங்குதல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இவ்வாறு பராமரிக்க தவறும் போது சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளுதல் என்றும் உரிய விடயம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை தொடந்து கண்காணிப்பு மேற்கொள்வதற்காக கூட்டத்தில் கலந்து உத்தியோகத்தர்கள் அனைவரையும் பிரதிநிதிப்படுத்தி குழு ஒன்றை அமைக்க ஆலோசிக்கப்பட்டதுடன் இதனை ஒருங்கிணைப்பு செய்யும் பொறுப்பினை பிரதேச செயலகம் மேற்கொள்ள உள்ளது. இதனையடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவசரநிலையை கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை முதல்வரின் பணிப்புக்கிணங்க மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பரின் ஆலோசனையுடன் சுகாதார பிரிவினர் இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ்