திருகோணமலை கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85 வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்துள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நாளில் இருந்து பணிகளை ஆரம்பித்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகும் வரை முதலீடு செய்யும் நிறுவனத்திற்கு 85 வீத பங்குகளும் இலங்கை அரசுக்கு 15 வீத பங்குகளும் கிடக்கும் என உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகள் பூர்த்தியாகும் போது முதலீட்டாளருக்கு 75 வீத பங்குகளும் இலங்கை அரசுக்கு 25 பங்குகளும் கிடைக்கும். 20வது ஆண்டில் இருந்து முதலீட்டு காலம் முடியும் வரை இரண்டு தரப்பினரும் பெற்றுக்கொள்ளும் பங்கு வீதங்களுக்கு அமைய நிறுவனத்தின் உரிமை தீர்மானிக்கப்படும்.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.
இதனிடையே மேற்படி அமைச்சரவை பத்திரத்தின் மூலம் கந்தளாய் சீனி நிறுவனத்திற்கு சொந்தமான 20 ஆயிரம் ஏக்கரை விற்பனை செய்யவும் ஆசியாவில் மிகப் பெரிய மதுபான உற்பத்தி தொழிற்சாலையையும் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதனை தாம் எதிர்ப்பதாக அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.