ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரஹெல பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகிய மாமனார் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்படட நபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தகராறு முற்றி பின்னர் மோதலின் போது, கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளின் கணவரால் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ள போதிலும், அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.